Tuesday, 4 July 2023

தம்பதெனிய கால இலக்கிய வளர்ச்சி

 தம்பதெனிய கால இலக்கிய வளர்ச்சி

 தம்பதெனிய காலத்திலேயே வளர்ச்சி அடைந்த முக்கியமான துறையாக விளங்குவது இலக்கியத்துறை ஆகும். அவ்வாறு இலக்கிய துறை வளர்ச்சி அடைந்ததால் இலங்கையிலே அறிவு பாதுகாக்கப்பட்ட காலமாக புகழப்படுகிறது. இங்கே,

               1. மன்னர்களின் ஆதரவு.

               2. பிரிவினாக்களின் எழுச்சி.

               3. அறிஞர்களின் செயல்பாடு.

               4. இலக்கிய வளர்ச்சி.

என்பன இக்காலத்தில் கல்வி, கலாச்சார துறையின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தியதை காணமுடிகிறது. இரண்டாம் பராக்கிரமபாகு மற்றும் அவரது தந்தையாரான மூன்றாம் விஜயபாகு போன்றோரின் பணிகளிலே இத்தகைய எழுச்சி நிலை ஏற்பட்டது.


 மாகனது படையெடுப்பை தொடர்ந்து பொலநறுவை இராசதானி வீழ்ச்சி அடைந்தது. இதனால் இலக்கிய துறையிலே பெரிய அழிவு தோன்றியது. அவ்வேளையில் கல்வித்துறையை வளர்ப்பதில் மூன்றாம் விஜயபாகு ஆர்வம் செலுத்தினான். அந்த வகையிலே அழிந்த இலக்கியங்களை புதுப்பித்து எழுதுவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தினான். அந்த வகையில் அழிந்த இலக்கியங்களைத் தேடி எடுத்து தொகுத்ததோடு வெளிநாடுகளில் இருந்தும் இலக்கியங்களையும் பெற்றுக் கொண்டான். அது மாத்திரம் அல்லாது மாகனின் படையெடுப்பால் தப்பி ஓடிய அறிஞர்களை மீளவும் தம்பதெயனியாவிற்கு வரவழைத்து இலக்கியப் பணிகளில் ஈடுபடச் செய்தான். "விஜயசுந்தரராமய" என்ற கட்டிடத்தை நிறுவி அங்கே பிரிவெனா கல்வியை நடைபெறச் செய்தான். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பௌத்த பிக்குகளை வரவழைத்து கல்வி மேம்பாட்டுக்கு உதவினான். இவனது முயற்சியால் இலக்கிய துறை பாதுகாக்கப்பட்டது. சிங்களம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இலக்கியங்கள் எழுச்சி பெற்றது.


 மூன்றாம் விஜயபாகுவின் பின் ஆட்சிப் பொறுப்பை பெற்றுக்கொண்ட இரண்டாம் பராக்கிரமபாகு மேலும் பல பணிகளை ஆற்றி இலக்கிய துறையை பலப்படுத்தினான். அந்த வகையிலே தந்தையாரைப் போன்று இலக்கியங்களை புதுப்பித்ததோடு பல இலக்கியங்களையும் எழுதினான். அந்த வகையில்,

  • வனவினி சன்னத
  • விசுத்தி மார்க்க மகா சன்னத
  • கவிசிலுமின

ஆகிய நூல்களை ஆக்கியிருந்தான். மூன்று மொழிகளிலே சிறந்த ஆற்றல் உள்ளவனாக விளங்கினான். பாளி, சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றிருந்த இவன் விசுத்தி மார்க்க என்ற பாளி இலக்கியத்திற்கு விளக்க உரை எழுதி விசத்தி மார்க்க மகாசன்னத என வெளியிட்டார். அத்துடன் தான் எழுதிய கவிதைகளை தொகுத்து கவிசிலுமின என்ற நூலாக வெளியிட்டார். அந்த வகையிலே இவன் "கலிகால சாகித்திய சர்வஞான பண்டிதன்" என அழைக்கப்பட்டான். மயூரபாத பிரிவெனா, நந்தன பிரிவெனா, பிரதிராஜ பிரிவெனா, வத்தல பிரிவெனா உள்ளிட்ட பல்வேறு பிரிவினாக்களை நிறுவி கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றினான். "சந்தர்மரத்னாவலிய" என்ற நூலை எழுதிய தர்மசேனதேரர் மற்றும் "பூஜாவலிய, ஜோகார்ணய" போன்ற நூல்களை எழுதிய புத்தமித்திர தேரர் போன்றோர் இவனது அரண்மனையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.  அத்துடன் இக்கால பகுதியில் பல்வேறு இலக்கியவாதிகள் வாழ்ந்து இலக்கிய துறை வளர்ச்சியில் பங்காற்றியதாக தெரிய வருகிறது. அதுமாத்திரம் அல்லாது பிக்குகளும் பிக்குகள் அல்லாதவர்களும் கல்வி கற்க கூடிய வகையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். அந்த வகையிலே "போதற்ய மருந்தகா, ரசவாகினி, சமந்தகூட வண்ணை, தைவக்ஞ காமதேனு, பயோதசித்தை, ஜீனாசரிதம், சிதத்சங்கராவ உள்ளிட்ட பல நூல்கள் இக்காலப்பகுதியில் எழுந்ததாக கூறப்படுகிறது.


 வெதேகதேரர் - "ரஸவாகினி, சமந்தகூடவண்ண, சிதத்சங்கராவ" போன்ற நூல்களை எழுதினார். இங்கு இலக்கண நூல்களும், வைத்திய நூல்களும் எழுந்ததாக தெரியவருகிறது. அந்த வகையில் "ஜோவர்நய" வைத்திய நூலும் "சிதத்சங்கராவ" இலக்கண நூலாகும். இவற்றை விட "லோகார்நய சங்கதா" ஒரு வைத்திய நூலும் ஆகும்.


 எனவே மேற்கூறப்பட்ட வகையில் தொகுத்து நோக்கும் போது தம்பதெனிய காலம் இலக்கியத்துறையில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளமையை காண முடிகின்றது. 

ஆறாம் பராக்கிரமபாகு

ஆறாம் பராக்கிரமபாகு

கிபி (1412-  1461 )

 கோட்டை காலத்தில் முதல் மன்னனாக குறிப்பிடப்படுபவன் ஆறாம் பராக்கிரமபாகு ஆவான். இவன் கிபி 1412க்கும் 1415க்கும் இடையில் ஏதோ ஒரு ஆண்டில் அரசனாக முடிசூடி இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவன் கிபி 1461 வரை அரசனாக இருந்தான் .இலங்கையில் அரசியல், கலாச்சார, பொருளாதார விடயங்களில் மிகுந்த செல்வாக்கு செலுத்தினான் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இவன் றைகம பகுதியில் அரசனாக இருந்தான். இதனால் இவனை றைகம பராக்கிரமபாகு என அழைத்தனர். பின்னாளிலே தியவன்ன ஓயா கரையில் கோட்டை ஒன்றை நிறுவி அங்கே தனது தலைநகரத்தை மாற்றிக் கொண்டான். இதன்பின் அவன் கோட்டை பராக்கிரமபாகு என அழைக்கப்பட்டான். இவனது வரலாறு பற்றி அறிவதற்கு "பரகும்பாசரித" என்ற நூலும் தொல்பொருள் சான்றுகளும் மேலும் பல இலக்கியங்களும் சான்றுகளாக உள்ளன.


 ஆறாம்  பராக்கிரமபாகு பற்றி அறிகின்ற போது சீன தளபதியான செங்கோ என்பவன் இலங்கையை கைப்பற்றி இலங்கையிலே சீனரது ஆட்சியை நிலைநிறுத்தி சென்றதைத் தொடர்ந்து சீனரது செல்வாக்கு மேலோங்கி காணப்பட்டது. அவ்வேளை சீனரிடம் இருந்து நாட்டை மீட்டு இலங்கையை ஒரு சுதந்திர நாடாக்கிய பின் சிறந்த ஆட்சியை மேற்கொண்டான். அந்த வகையில் இலங்கை முழுவதையும் ஒன்றிணைத்த இறுதிச் சிங்கள மன்னன் என்ற வகையில் சிறப்பிடம் பெற்றான். ஆரம்பத்தில் வன்னிய சித்தரசர்களை அடக்கியதோடு மலையாக ராஜ்ஜியத்தில் ஆட்சி புரிந்த பராக்கிரமஆபா என்பவனை வெற்றிகொண்டு மலையக ராஜ்ஜியத்தையும் தனது ராஜ்ஜியத்துடன்  இணைத்து கொண்டான். அதுமட்டுமல்லாது வலிமை வாய்ந்த அரசு ஒன்றை உருவாக்கினான். இக்காலப் பகுதியில் தென்னிந்தியாவை ஆட்சி புரிந்த நாயக்க வம்ச மன்னனான இரண்டாம் தேவராஜன் என்பவன் தனது படைகளுடன் கோட்டை இராஜ்ஜியம் நோக்கி படையெடுத்துச் சென்று ராஜ்ஜியத்தை கைப்பற்றி பெருந்தொகை செல்வங்களையும் சூறையாடி திரும்பி சென்றான். அவ்வேளை நாயக்க வம்ச அரசனுக்கு யாழ்ப்பாண அரசனும் துணை புரிந்தான். இதனால் ஆத்திரமடைந்த ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணம் நோக்கி படையெடுக்க திட்டமிட்டான். ஆனாலும் நாயக வம்ச மன்னனின் உதவி யாழ்ப்பாண அரசனுக்கு இருந்ததால் அந்த நடவடிக்கையை ஆறாம் பராக்கிரமபாகு கைவிட்டான்.


ஆறாம் பராக்கிரமபாகுவிற்கு இரண்டு தளபதிகள் காணப்பட்டனர். அவர்கள் இவனது வளர்ப்பு மகன்களான சப்புமல் குமாரன், அம்புலுகல குமாரன் ஆகியோர்கள் ஆவர். இவர்களின் ராஜ விசுவாசமும் ஆறாம் பராக்கிரமபாகு மீதான பற்றும் சிறந்த அரசியல் நிலை உருவாக்குவதற்கு வழி வகுத்தது.


 கிபி 1449 ஆம் ஆண்டளவில் மாலிக்கபூர் என்ற இஸ்லாமிய தளபதி ஒருவன் பெரும் படைகளுடன் தென்னிந்தியா நோக்கி படையெடுத்து நாயக்கர்களை தோற்கடித்தான். இதனால் நாயக்கர்கள் தோல்வியடைந்து பலவீனம் அடைந்தனர். இதனை அறிந்த ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணம் நோக்கி படையெடுக்குமாறு கட்டளையிட்டான். யாழ்ப்பாணம் நோக்கி படையெடுப்பை மேற்கொண்ட சப்புமல்குமாரன் கோட்டையில் இருந்து படைகளுடன் புறப்பட்டு இலங்கையின் மேற்கு திசையில் நகர்ந்து மாந்தைப் பகுதியை சென்றடைந்ததன் பின் வன்னிய சிற்றரசர்களுடன் மோதல் ஏற்பட்டது. அவர்களை ஒவ்வொருவராக வெற்றி கொண்டு பூநகரியை அடைந்து பின் அங்கிருந்து ஆனையிறவை அடைந்து ஆனையிறவின் ஊடாக யாழ்ப்பாண பகுதிக்குள் நுழைந்த போது சாஹவர் கோட்டை பகுதியில் நின்ற சாஹவர் படைகளை தோற்கடித்த பின் யாழ்ப்பாண பகுதிக்குள் நுழைந்த சப்புமல் குமாரன் தலைமையிலான படைகள் யாழ்ப்பாண அரசனாக இருந்த கனக சூரிய சிங்கை ஆரியனை வெற்றி கொண்டு யாழ்ப்பாணத்தை முழுமையாக கைப்பற்றிக் கொண்டான். இவ் வெற்றி குறித்து ஆறாம் பராக்கிரமபாகுவிற்கு தெரியப்படுத்திய போது யாழ்ப்பாண ஆட்சியாளனாக சப்புமல் குமாரனையையே நியமித்தான்.


 சப்புமல் குமாரன் ஸ்ரீ சங்கபோதி புவனேகபாபு என்ற பெயரில் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்தான் என தெரிய வருகிறது. தோல்வி அடைந்த கனக சூரிய சிங்கை ஆரியன் இந்தியாவிற்கு தப்பிச்சென்று நாயக்க மன்னனிடம் தஞ்சம் அடைந்தார். இது பற்றி "கோகில சந்தேசய" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.


 சப்புமல் குமாரன் யாழ்ப்பாணத்தில் அரச பதவி ஏற்றிருந்த வேளையில் கண்டி ராஜ்ஜியத்தில் கலவரம் ஒன்று தோன்றியது ஜோதிய சீடான என்பவன் கண்டியை கைப்பற்றியதோடு கோட்டை ராஜ்யத்தையும் கைப்பற்ற முனைந்தான். அவளையில் அம்புலுகலகுமாரன் என்பவன் பராக்கிரமபாகுவின் படைகளுக்கு தலைமை தாங்கி ஜோதிய சீடானவின் படைகளுக்கு எதிராக போர் புரிந்தான். சிறப்பாக போர் புரிந்து தனது திறமையால் ஜோதிய சீடானவை வெற்றிகொண்டு கண்டிராச்சியத்தை மீண்டும் கைப்பற்றினான். ஆறாம் பராக்கிரமபாகு கண்டி ராஜ்ஜியத்தில் தனக்கு சார்பாக அம்புலுகல குமாரனை நியமித்தான். இவ்வாறு இலங்கை முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆட்சி புரிந்த ஆறாம் பராக்கிரமபாகு பொருளாதார, கலாச்சார ரீதியிலும் நாட்டை ஒன்றிணைத்தான்.


 ஒருமுறை கம்போடிய நாட்டிற்கு வணிக நடவடிக்கையின் பொருட்டு இலங்கையில் இருந்து சென்ற கறுவா கப்பலை தென்னிந்தியாவில் நாயக்க வம்ச மன்னனான மாளவராஜன் என்பவன் கடலிலே மறித்து கொள்ளையடித்தான். இதனால் ஆத்திரமடைந்த பராக்கிரமபாகு தென்னிந்தியா நோக்கி படையெடுத்து நாயக்கரின் ஆட்சியின் கீழ் இருந்த அதிவீரராம பட்டினம் என்ற இடத்தை கைப்பற்றி அங்கிருந்து திறை பெற்று திரும்பினான் எனக் கூறப்படுவதன் மூலம் இந்தியா நோக்கி படையெடுத்து வெற்றி பெற்ற மன்னனாகவும் ஆறாம் பராக்கிரமபாகு சிறப்பிக்கப்படுகிறான்.


 ஆறாம் பராக்கிரமமாக அரசியல் ரீதியாக நாட்டை ஒன்றிணைத்த பின்னர் பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டான். பௌத்த சமயத்தை பாதுகாப்பதிலும் பௌத்த சடங்குகளை நடத்துவதிலும் ஆர்வம் செலுத்தினான். களனி ஆற்றங்கரையிலே உபசம்பதா நிகழ்வை நடத்தியதோடு கோட்டையில் ஒரு பாதுகாப்பு அரணை அமைத்தான். அதற்கு அருகிலே தந்ததாது விகாரை ஒன்றை நிறுவி அங்கே புத்தரது பற்சின்னத்தை வைத்து வழிபடச் செய்தான். பிரிவெனா கல்வியை மீளவும் வளர்த்தெடுத்தான். அந்த வகையிலே பத்மாவதி பிரிவெனா, சுனேத்திராதேவி பிரிவெனா, ஸ்ரீகனானந்த பிரிவெனா இருகல்குல திலக பிரிவெனா, விஜயபாகு பிரிவெனா உள்ளிட்ட பல பிரிவெனாக்களை நிறுவி கல்வி சேவையை விருத்தி செய்தான். சமஸ்கிருதம், பாளி, சிங்களம் போன்ற மொழிகளை ஆதரித்ததோடு அறிஞர்களையும் புலவர்களையும் பிக்குகளையும் ஆதரித்தான். ஏராளமான செல்வங்களை வழங்கி கல்வித்துறையை மேம்படுத்தினான். அத்துடன் இவரது முயற்சியால் பல இலக்கியங்கள் உருவாகின. ரூவான்மல என்னும் இலக்கியம் இவனால் உருவாக்கப்பட்டது. இதனை விட பரகும்பாசரித என்ற நூல் இவனது வரலாறு பற்றி கூறுவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.


 ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் அவன் "உபுல்வன்" என்ற இந்து கடவுளுக்கும் கோயில் அமைத்தான் என கூறப்படுகிறது. அது மாத்திரமல்லாது அவனது ஆட்சியின் முடிவிலே கோட்டையில்  ஆறாம் பராக்கிரமபாககுவும், கண்டியில் அம்புலுகலகுமாரனும், யாழ்ப்பாணத்தில் சப்புமல் குமாரனும் ஆட்சி புரிந்தனர். இலங்கை பின்நாளில் மூன்று ராஜ்ஜியமாக மாறுவதற்கு இவனே அடிகோலினான் எனவும் தெரிய வருகிறது.


 எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும்போது ஆறாம் பராக்கிரமபாகு மிகச்சிறப்பான முறையிலே விளங்குவதோடு இலங்கை முழுவதையும் ஒன்றிணைத்து ஆட்சி புரிந்த கடைசி மன்னனாகவும், பல்வேறு சிறப்புகளையும் ஏற்படுத்தி நாட்டை பாதுகாத்த மன்னன் ஆகவும் விளங்குகின்றான்.

கல்வியுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள். - Social Problems Related to Education

 சமூகப் பிரச்சனை என்பது ஒரு சமுதாயத்தினுள் உருவாகும் பிரச்சனைகளாகும் இது மக்கள் தமது முழு திறனையும் அடைந்து கொள்வதை கடினமாக்குவதாக காணப்படும...