Tuesday, 16 May 2023

டொனமூர் யாப்பு

டொனமூர் யாப்பு (1931)

 இலங்கை வரலாற்றிலேயே 1931 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் யாப்பு பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே விளங்குகின்றது. இலங்கையில் சட்ட நிரூபணசபை அங்கத்தவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தப்பட்டதன் விளைவாக இலங்கையில் இருந்த ஆள்பதி சேர். கியூ. கிளிபேட் என்பவர் புதியதொரு யாப்பு அவசியமான வலியுறுத்தப்பட்டதற்கு அமைவாக 1927 ஆம் ஆண்டு இலங்கை வந்த டொனமூர் குழுவினர் 141 பிரமுகர்களை சந்தித்து உரையாடியும் 44ற்கு மேற்பட்ட மேடை கூட்டங்களை நடாத்தியும் சில தீர்மானங்களை முன்வைத்தனர். ஆள்பதி றொபேட் ஸ்ரான்லி காலத்தில் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்பின் பிரகாரம் பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

  1.  சர்வஜன வாக்குரிமை
  2.  ஏழு நிர்வாக குழுமுறை
  3.  அரசு கழகம்
  4.  பிரதேச வாரி பிரதிநிதித்துவமும் விரிவாக்கமும்
  5.  ஆள்பதி அதிகாரக் குறைப்பு
  6.  அரசாங்க செயலாளர் நியமனம் ( மூன்று காரிய தரிசிகள்)
  7.  மந்திரி சபை முறை
  8.  அரசாங்க சேவை ஆணைக்குழு அல்லது பொதுச் சேவை ஆணைக்கு  
 ஆகிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


 சர்வஜன வாக்குரிமை

 இலங்கை வரலாற்றில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை சகல துறைகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்திய விடயமாக குறிப்பிடப்படுகிறது. சர்வஜன வாக்குரிமையை டொனமூர் அறிமுகப்படுத்திய வேளை இலங்கையில் இருந்து மத்தியதர வர்க்கத்தினரை சேர்ந்தவர்கள் எதிர்த்தனர். குறிப்பாக      A.Eகுணசிங்க உள்ளிட்ட ஒரு சிலர் ஆதரித்தனர். ஆனால் பெரும்பாலான மத்தியதர மக்கள் எதிர்த்தனர். அவர்கள் பின்வரும் கருத்துக்களை   முன்வைத்துள்ளனர்.

  • படிப்பறிவற்றவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதால் வாக்குகள் வீணடிக்கப்படும்.
  • ஏழைகளுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதால் வாக்குகளை விற்றல் ஆள்மாறாட்டம் செய்தல் வாக்குகளை வீணடித்தல் வாக்கின் பெறுமதியை உணராத நீதிக்கு புறம்பாக செயற்படல் என்பன இடம்பெறும்.
  • பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதால் எந்த பயனும் இல்லை அவர்கள் அரசியல் அறிவு அற்றவர்கள், சமூக அறிவு அற்றவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
  • சொத்தற்றவருக்கு நாட்டுப்பற்று கிடையாது அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க முடியாது என கூறினார்.
  • சர்வஜன வாக்குரிமை வழங்கப்படுவதனால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் எனவும் வலியுறுத்தினார்.

 அவ் வேளையில் டொனமூர் பிரபு சர்வஜன வாக்குரிமை மூலம் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றார். அது மாத்திரமல்லாது "நீந்த வேண்டுமானால் நீரில் இறங்க வேண்டும் அதேபோல் அரசியல் அறிவு வளர வேண்டுமானால் அரசியல் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும்." அதற்காக சர்வஜன வாக்குரிமை வழங்க வேண்டும் என்றார்.


 இதனால் சர்வஜன வாக்குரிமை டொனமூர் சிபாரிசின்  பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றனர். (ஆண் பெண் இருபாயாரும்) அரசு கழகத்திற்கான உறுப்பினரில் 50 பேர் தேர்தல் மூலம் அதாவது மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். பிரதேச வாரியாக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



சர்வஜன வாக்குரிமையின் தாக்கம்

 சர்வஜன வாக்குரிமையானது இலங்கையில் பல்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தியது என அனுபவரீதியாக காணமுடிகிறது. இலங்கை வரலாற்றில் பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் போது பல்வேறு எதிர்ப்புகள் தோன்றின. ஆனாலும் அது அறிமுகப்படுத்தப்பட்டதால் இலங்கை வரலாற்றிலே பல்வேறு மாற்றங்கள் தோன்றின. இன்றைய நவீன இலங்கையின் மாற்றங்களுக்கு அவ்வாறான வாக்குரிமை மிக முக்கிய பங்காற்றியுள்ளது.


 சர்வஜன வாக்குரிமையின் அறிமுகத்தால் பெண்களின் அரசியல் அறிவு வளர்ச்சி அடைய தொடங்கியது. அரசியல், பொருளாதாரம் என்பவற்றில் பெண்கள் முன்னேற்றம் அடைந்தனர். பெண் அரசியல் தலைவர்களும் உருவாகினர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பெண் பிரதமராகவும், சந்திரிகா பண்டாரநாயக்கா பெண் ஜனாதிபதியாகவும் இலங்கையில் இருந்து ஆட்சி புரிந்திருப்பதை காணலாம். பெண்கள் அரசியலில் ஈடுபட்டதால் பெண்கள் நலன்சார் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பெண்களுக்கு என தனியான வைத்தியசாலைகள், மகளிர் பாடசாலைகள் நிறுவப்பட்டன. பெண்களுக்கு என தனி அமைச்சும் ஒதுக்கப்பட்டது. பெண்கள் இன்று அரசியலில் ஈடுபடுவதற்கு சர்வஜன வாக்குரிமை தூண்டுகோலாக மாறியது.


 சர்வஜன வாக்குரிமை செல்வாக்கு பெற்றதால் கட்சி முறை தோன்றியதனால் கட்சியில் எல்லா சமூகத்தவர்களையும் உள்ளடக்க வேண்டி இருந்ததால் சாதி வேறுபாடு இன்றி கட்சி முறைகள் தோன்றி வளர்ச்சி அடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, லங்கா சமாசமாஜக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தோன்றி வளர்ச்சி அடைந்திருந்தன. இன்று 60க்கும் மேற்பட்ட கட்சிகள் செயற்படுகின்றன.


 சர்வஜன வாக்குரிமை சிறுபான்மையினருக்கு பாதிப்பினையும் ஏற்படுத்தியது. ஏனெனில் சிறுபான்மையினர் உள்ள பிரதேசங்களில் பெரும்பான்மையினர் ஆதிக்கம் மேலோங்கி இருந்ததை காணலாம். சர்வஜன வாக்குரிமை மூலம் சமூக முன்னேற்றங்களும் விவசாய அபிவிருத்தி போன்றன தோன்ற வாய்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக தேர்தல் காலங்களில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவதால் பல திட்டங்கள் உருவாக வழி வகுத்தது. டி எஸ் சேனநாயக்கா மின்னேரியாத் திட்டத்தையும், உடவளவை திட்டத்தையும், கல்லோயா திட்டத்தினையும் கொண்டு வந்தார்.  C. W. W கன்னங்கரா இலவச கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். சில தீய விளைவுகளுக்கும் வழிவகுத்தது குறிப்பாக S. W. R. D பண்டாரநாயக்கா தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்தை கொண்டு வந்தார். இதனை ஒரு பாதிப்பான நிகழ்வு என கருதலாம்.   


 D.Sசேனநாயக்கா சேனநாயக்க சமுத்திரத்தை உருவாக்கி இருந்தார். இது ஒரு சிறப்பான திட்டமாகும். சர்வஜன வாக்குரிமை மூலம் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களும் மேல் நிலைக்கு வர உதவியது. சௌமிய மூர்த்தி தொண்டமான் R.பிறேமதாச முதலான அரசியல் தலைவர்கள் சர்வஜன வாக்குரிமையினாலேயே மேல்நிலை அடைய முடிந்தது. அதேவேளை லஞ்சம், ஊழல் முதலானவை அதிகரிக்க நேர்ந்ததோடு வாக்குகளை விற்றல், ஆலள்மாறாட்டம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதே வேளை ஜனநாயகம், மனித உரிமை முதலான கோட்பாடுகள் வளர்ச்சி அடையவும் வழி வகுத்தது. பின்னணியில் சுதந்திரம் பற்றிய எண்ணம் வளர்ச்சி அடையவும், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் வளர்ச்சி அடையவும் உதவியது. அதுமாத்திரம் அல்லாது  சிறுபான்மையினருக்கு பாதிப்பான நிலையும் ஏற்பட்டது. குறிப்பாக சிறுபான்மையினர் உள்ள இடங்களில் தேர்தலில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் காணப்பட்டது.


 எனவே கூறப்பட்டவற்றை தொகுத்து நோக்கும் போது சர்வஜன வாக்குரிமையானது இலங்கை வரலாற்றில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்தத்தோடு ஜனநாயக கோட்பாடுகள் வளர்ச்சி அடைய வழிவகுத்திருந்ததனையும் காணலாம்.



அரசுக் கழகம்

 டொனமூர் யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட விடயங்களில் மற்றும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது அரசு கழகமாகும் இது மொத்தமாக 61 அங்கத்தவர்களை கொண்டுள்ளது. இதில் 50 பேர் பிரதேச அடிப்படையில் அதாவது பிரதேசவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் நாடு முழுவதிலும் இருந்து தேர்தல் மூலம் 50தேர்தல் தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். சிறுபான்மையினர் சார்பாக ஆள்பதி எட்டு பேரை நியமனம் செய்வார். அவர்களுடன் பிரதம செயலாளர், நிதிச் செயலாளர், நீதி செயலாளர், ஆகியோரை உள்ளடக்கி மொத்தம் 61பேரை உள்ளடக்கியதாக காணப்படும். 


   அரசு கழகம் ஆனது சட்ட உருவாக்கத்தில் அதிக அதிகாரம் மிக்க மன்றாக செயற்படும். அரச துறையில் இலங்கைக்கு அனுபவம் கிடைப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக விளங்கியது. எந்த ஒரு மசோதாவும் இங்கு நிறைவேற்றப்பட்ட பின்னரே சட்டமாக முடியும் ஆகவே சட்ட உருவாக்கத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மன்றாக இது விளங்கியது. இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போல் அவர்கள் செய்யப்பட்டனர்.


 ஏழு நிர்வாகக் குழு

 டொனமூர் யாப்பில் ஏழு நிர்வாகக் குழுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசுக் கழகத்தில் பிரதேச அடிப்படையில் தெரிவு செய்யப்படும் 50 பேரும் ஆள்பதியால் நியமிக்கப்பட்ட எட்டு பேரும் உள்ளடங்கிய 58 பேரும் 7 நிர்வாக குழுவாக வகுக்கப்படுவர். ஒவ்வொரு நிர்வாக குழுவிலும் 6 தொடக்கம் 9 வரை எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இடம்பெறுவர். ஒவ்வொரு நிர்வாக குழுவும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை சரியான முறையில் மேற்கொள்வதன் மூலம் அரசாங்க சேவை ஒழுங்காக இடம்பெறும் என டொனமூர் சிபாரிசு செய்தார்.

  1.  சுகாதாரம்
  2.  கல்வி
  3.  விவசாயம், காணி
  4. வர்த்தகம், கைத்தொழில்
  5. உள்ளூராட்சி
  6. உள்நாட்டலுவல்கள்
  7. போக்குவரத்தும் பொது கட்டிட வேலையும்
 என்ற ஏழு நிர்வாகக் குழுக்களுமே இங்கு செயற்ப்பட்டன. ஒவ்வொரு நிர்வாகக் குழுவும் தமது நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான மசோதாக்களை உருவாக்குவதோடு வரவு செலவு திட்டங்களை தயாரிப்பதும் அவர்களது முக்கியமான கடமைகள் ஆகும்.


 மந்திரி சபை முறை 


 டொனமூர் ஜாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் ஓர் விடயமாக விளங்குவது அமைச்சரவை முறையாகும். ( மந்திரி சபை முறைமை) நிர்வாக குழுவிலும் உள்ள ஒவ்வொரு தலைவர்கள் ஏழு பேரும் பிரதம காரியதரிசி, நிதிக் காரியதரிசி, நீதி காரியதரிசி எனப்படும் மூவரையும் உள்ளடக்கிய 10 பேரும் அமைச்சரவையில் உள்ளடங்குவர். ஒவ்வொரு நிர்வாக குழுவிலும் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் மந்திரிசபைக்கு கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டு இறுதியில் அமைச்சரவையில் நிறைவேறும் தீர்மானங்கள், மசோதாக்கள் அரசக்கழகத்தில் சமர்ப்பிக்கப்படும். பிற்காலத்தில் அமைச்சரவை முறை தோன்றி வளர்ச்சி அடைவதற்கு இது வாய்ப்பாக அமைந்தது.


பிரதேச வாரி பிரதிநிதித்துவம்


 கோல்புறூக் கமரன் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது இனவாரிப் பிரதிநிதித்துவ முறை மக்களை இனரீதியாக சிந்திக்க வைப்பதால் இனப் பாகுப்பாடு அதிகரிப்பதாக குறிப்பிட்ட டொனமூர் 1883 கொட்டாஞ்சேனைக் கலகம், 1915 ஆம் ஆண்டு கம்பளை கலகம் போன்றன இனமுரண்பாட்டை வெளிப்படுத்துகிறது என சுட்டிக்காட்டினார்.

  ஆகவே பிரதேச பாரி அடிப்படையில் சர்வஜன வாக்குரிமை மூலம் தெரிவு செய்கின்ற முறை சிறப்பானது என சுட்டிக்காட்டிய டொனமூர் இலங்கை முழுவதையும் 50 தேர்தல் தொகுதிகளாக வகுத்து ஒரு தொகுதிக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்யப்படும் முறையை அறிமுகம் செய்தார். இதன்படி 75,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி அல்லது ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்திற்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் பிரதேசவாரி பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன ரீதியான ஒற்றுமையை வலியுறுத்தி பிரதேசவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட போதும் இனரீதியாக சிந்திக்க தலைப்பட்ட மக்கள் இனரீதியான சிந்தனையை அதிக அளவில் வளர்த்துக் கொண்டதால் தேர்தலின் போது இன வேறுபாட்டை அதிகம் காட்டினர். இதனால் பின்னால் விகிதாசார பிரதிநிதித்துவம் தோற்றம் பெற்றதாக தெரிய வருகிறது. பிரதேசவாரி பிரதிநிதித்துவம் வெற்றி அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.


மூன்று காரியதரிசிகள் (செயலாளர் )


 டொனமூர் யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட விடயங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுவது மூன்று காரியதரிசிகள் நியமன முறையாகும். பிரதம காரியதரிசி, நிதிக் காரியதரிசி, நீதி காரியதரிசி ஆகிய மூவரும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை சரியான முறையில் மேற்கொள்வதோடு நிர்வாக ரீதியான செயற்பாடுகளையும் ஒழுங்கமைப்பர். இதன் மூலம் ஆள்பதியின் அதிகாரங்கள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

 பிரதம காரியதரிசி என்பவர் ஏனைய காரியங்களுக்கு பொறுப்பாகவும் அமைச்சரவையின் தலைவராகவும் தேவை ஏற்படின் அரசுக் கழகத்தின் தலைவராகவும் செயற்படுவார். இவர் ஆள்பதியின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு கூறுபவராகவும் காணப்படுவர். வெளிநாட்டு ராஜதந்திரம், உள்நாட்டு பாதுகாப்பு போன்ற விடயங்களிலும் இவர் அதிகாரம் உடையவராக காணப்படுவர். ஆள்பதி இல்லாத தருணத்தில் ஆள்பதிக்கு பதில் கடமையாற்றுவர்.


 நிதிக்காரிய தரிசி அரசாங்க அச்சுக் கூட்டுத்தாபனம், சுங்கத் திணைக்களம்,  துறைமுகம் போன்றவற்றிற்கு பொறுப்பாக செயற்படுவர். அது மாத்திரம் அல்லாது நாட்டின் வரவு செலவு திட்டத்தை தயாரிப்பது, வருமானத்தை ஈட்டக் கூடிய வழிகள் பற்றியும் ஆள்பதிக்கு பரிந்துரைப்பார்.


 நீதி காரியதரிசி எனப்படுபவர் நாட்டிற்கு தேவையான சட்டங்களை உருவாக்குவதோடு நீதித்துறையை ஒழுங்கமைத்தல், நீதிமன்றங்களை நிர்வகித்தல், யாருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால் உயர்நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரித்தல், நீதிபதிகளை நியமித்தல் முதலான கடமைகளை ஆற்றுவர். இதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட நீதித்துறை ஒன்று உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.


 ஆள்பதியின் அதிகாரக் குறைப்பு 


 கிபி 1802 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானிய முடிக்குக்குரிய நாடாக மாற்றப்பட்டது முதல் ஆள்பதியின் அதிகாரம் அதிகமாகவே காணப்பட்டது. சட்டம், நீதி, நிர்வாகம் ஆகிய முத்துறைகளிலும் ஆள்பதி வரையறுக்க முடியாத அளவிற்கு அதிகாரம் உடையவராக காணப்பட்டார். ஆள்பதி அதிக அதிகாரங்களை கொண்டிருப்பதால் அவர் சர்வாதிகாரி போன்று செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக டொனமூர் ஆள்பதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் சில முன்மொழிவுகளை முன் வைத்தார். அரசு கழகம் சட்ட உருவாக்கத்தில் அதிக அதிகாரங்களை கொண்டிருப்பதால் சட்ட உருவாக்கத்தில் ஆள்பதியின் பங்கு குறைக்கப்பட்டது. அதேவேளை ஏழு நிர்வாக குழுமுறை அறிமுகப்படுத்தப்பட்டதால் ஆள்பதியின் நிர்வாகம் தொடர்பான அதிகரங்கள் குறைக்கப்பட்டது. மூன்று காரியதரிசிகள் சட்டம், நீதி, நிதி ஒன்று விடயங்களை கண்காணிப்பதாலும் அமைச்சரவை தீர்மானங்களை முன் வைப்பதாலும் ஆள்பதியின் அதிகாரம் குறைவடைவதற்கான வாய்ப்புகள் உருவாக்கியது.


 மேற்கூறப்பட்ட வகையில் ஆள்பதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வாய்ப்புகள் ஏற்படுத்திய போதிலும் உண்மையில் அவரது அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை எனவே குறிப்பிடப்படுகிறது.


 அவசர கால நிலைமையின் போது நாட்டை முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல், எந்த ஒரு மசோதாவையும் சட்டமாக்க வேண்டுமாக இருந்தால் ஆள்பதியின் கையொப்பம் பெறுதல் அவசியம். அரசுக்கழகத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மையினர் பெற்ற மசோதாவை ஆறு மாதங்கள் வரை தள்ளிப்போடும் அதிகாரம் வழங்கப்பட்டது. முப்படைகளின் தலைவராகவும், வெளிநாட்டு ராஜதந்திரிகளை நியமிப்பவராகவும், அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொள்பவராகவும் காணப்படுவார். பிரித்தானிய அரசின் பிரதிநிதி என்ற வகையில் அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பாக செயற்படுவார். இதனால் ஆள்பதியின் அதிகாரம் குறைக்கப்படவில்லை என்றே சுட்டிக் காட்டப்படுகிறது.


பொதுச் சேவை ஆணைக்குழு


 டொனமூர் யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட விடயமாக குறிப்பிடப்படுவது பொது சேவை ஆணைக்குழு ஆகும். பொதுசேவை ஆணைக்குழு என்பது "மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெறுகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களின் நலன்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு" ஆகும். அரசாங்க உத்தியோகத்தர்களின் இட மாற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு முதலான விடயங்களில் ஏற்படுகின்ற அநீதிகளை தடுத்து நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு பொதுச்சேவை ஆணைக்குழு ஆகும்.

 எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும்போது இலங்கை வரலாற்றில் அரசியல், பொருளாதார, சமூக அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதற்கும் ஜனநாயகம் தளைதோங்குவதற்கும் டொனமூர் யாப்பு  வழி வகுத்திருந்ததனைக் காணலாம்.

No comments:

Post a Comment

ஆசிரியர் வாண்மை விருத்தி

ஆசிரியர் வாண்மை விருத்தி "ஆசிரியர் வாண்மை விருத்தி என்பது மாணவர்களுக்கான கல்விசார் அடைவு மட்டங்களை / பெறுபேறுகளை வெற்றிகாரமான வகையில் உ...